பழுதான ஹீரோ பேஷன் புரோ பைக்கை புதிது போல வாடிக்கையாளருக்கு விற்றதுடன் 7 முறை பழுதுபார்த்த பின்னரும் சரிவராத பைக்கிற்கு பதிலாக புதிய பைக்குடன், 2 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க மூன் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துக்கு திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஞானசேகரன்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹீரோ பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தை திருவாரூர் புறவழிச்சாலையில் உள்ள முன் மோட்டார்ஸ் என்கிற இருசக்கர வாகன டீலரிடம் வாங்கியுள்ளார். இந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியது முதல் கியர்பாக்ஸில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முன் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஞானசேகரன் பலமுறை பழுது நீக்க கொடுத்தும் இந்த பழுது முழுமையாக நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 ந்தேதி அன்று 7 வது முறையாக அந்த இருசக்கர வாகனத்தை, கியர்பாக்ஸ் பிரச்சனைக்காக ஞானசேகரன் மூன் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.
அடுத்த நாள் வண்டியை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வண்டியை கொடுக்காத நிலையில் இதுகுறித்து ஞானசேகரன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கும் மூன் மோட்டார் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி ஞானசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் 4 ந்தேதி அன்று அவரது இருசக்கர வாகனத்திற்கு திருவாரூர் போக்குவரத்து காவல்துறையால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ஞானசேகரனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தை தனது அனுமதியின்றி மூன் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்று உபயோகப்படுத்தி வருவதாக அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு மூன் மோட்டார்ஸ் நிறுவனம் சர்வீஸ் கொடுத்த வாடிக்கையாளரின் இருசக்கர வாகனத்தை அவரின் அனுமதி இன்றி உபயோகித்து போக்குவரத்து காவலரால் அபராதம் விதிக்கப்பட்டது என்பது வாடிக்கையாளருக்கு செய்த நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது என்றும் சுட்டிக்காட்டினர்.
எனவே இந்த பழைய வாகனத்தை நிறுவனம் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புது இருசக்கர வாகனத்தை வழங்க வேண்டும் என்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பளித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இந்த தொகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.