ராய்பூர்: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸ் மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும். ஜனநாயகமும் அரசியல் சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் காங்கிரசின் சிறப்பு மாநாடு நடக்கிறது. நாட்டில் நாடாளுமன்ற அமைப்புகள் தீவிர நெருக்கடியை சந்தித்து வருகின்றன; அரசியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என கூறினார். கட்சி செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்ய தேர்தல் தேவையா என உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.