கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தினக்கூலிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதில் இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில், தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதில் மற்றோரு முக்கிய தகவலாக, கடந்த 4 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில்தான் அதிக தற்கொலைகள்நடந்திருக்கின்றன. குறிப்பாக 2017-ம் ஆண்டு 5624-ஆக இருந்த தற்கொலைகள் 2021-ம் ஆண்டு 7673-ஆக உயர்ந்திருக்கின்றன.

தொடர்ந்து, 4 ஆண்டுக்களாகவே, அதிகரித்து இருக்கும் இந்த மரணங்கள் பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை பலரும் தெரிவிக்கிறார்கள். மேலும், தொழிலாளர் வாரியம் சார்பாக இதற்கு கொரோனா, ஆன்லைன் விளையாட்டுகள் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ன் அடிப்படையில் எல்லா தொழில்களுக்கும் ஊதியம் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதத்தில் காவலாளர்கள், தட்டச்சு செய்பவர்கள், தூய்மைப் பணிகள் செய்பவர்கள் என பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணியக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இதில் தினக்கூலித் தொழிலில் ஈடுபடுவோர் இணைக்கப்படுவதில்லை. இதனால் ஊதியம் குறைவாகக் கிடைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அதிக தற்கொலைகள் நிகழ்வதாக தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறையின் துணை செயலாளர் சித்ராவிடம் பேசினோம். “குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் பட்டியலில் தினக்கூலிகளை இணைப்பது தொடர்பாக கடந்த மாதம் கமிட்டி அமைக்கப்பட்டு, மாவட்டந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பெறப்படும் கருத்துகளை வைத்து இந்தப் பிரச்சனைக்கான தீர்வு நிச்சயம் எட்டப்படும். இன்னும் 15 நாள்களில் மாவட்டந்தோறும் தகவல்கள் எங்களுக்கு கிடைத்துவிடும். அதைத் தொடர்ந்து, நடவடிக்கைகள் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்” என்றார்.