புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் 6 பேரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில், ஆம் ஆத்மி – பாஜ இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல், நேற்று காலை வரை விடிய விடிய நடந்தது. இரவு முழுவதும் இரு கட்சி கவுன்சிலர்கள் அடிக்கடி மோதிக் கொண்டனர். இதனால், 14 முறை மாநகராட்சி மன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இரவு முழுவதும் கவுன்சிலர்கள் அவையிலேயே தங்கி, தூங்கினர்.
நேற்று காலை நடந்த மோதலில் தண்ணீர் பாட்டில்கள், செருப்புகளை வீசி பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், மன்றத்தை நாள் முழுவதுக்கும் மேயர் ஷெல்லி ஓபராய் ஒத்திவைத்தார். இதனால், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்படவில்லை. இத்தேர்தல் இன்று மீண்டும் நடத்தப்படும் என தெரிகிறது.