ஆரணி : தாடியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியில் அனுப்பிய ஆசிரியர்.!

மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கான ஒரு இடம் என்றால் அது பள்ளி தான். இதனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது தினமும் சீருடையை சுத்தமாக அணிந்து கொண்டு தலையில் எண்ணெய் வைத்து வர வேண்டும். 

மேலும், கை-கால் நகங்களை வெட்டி இருப்பதுடன் தலைமுடியையும் முறையாக வெட்ட வேண்டும். புள்ளிங்கோ கட்டிங் மற்றும் ஸ்டைலாக குறுந்தாடி வைக்க கூடாது என்பது உள்ளிட்ட சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலூரில் புள்ளிங்கோ ஸ்டைலில் தலைமுடியுடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் முடிதிருத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மறைவதற்குள் இதுேபான்று ஒரு நிகழ்வு நேற்று ஆரணியிலும் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் குறுந்தாடியுடன் முகச்சவரம் செய்யாமல் வந்துள்ளனர். 

இதைப்பார்த்த ஆசிரியர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி உடனடியாக முகச்சவரம் செய்து வர வேண்டும் என்று வெளியே அனுப்பினார். அதற்கு அவர்கள் முடித்திருத்த நிலையங்களில் ஒருவருக்கு முகச்சவரம் செய்ய ரூபாய் 50 கேட்டதால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு ரூபாய் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளனர். 

இதையடுத்து, மாணவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் ‘ரேசர் ஷேவ்’ 10 ரூபாய் கொடுத்து வாங்கி ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொண்டு, பின்னர் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். 

இதனை அங்கிருந்த பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பள்ளியையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.