பெங்களூரு: உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார எழுச்சி உத்வேகம் அளிக்கும் என்று ஜி20 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் கர்நாடக மாநிலம்பெங்களூருவில் நேற்று நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
இந்திய பொருளாதாரத்தின் எழுச்சியில் இருந்து ஜி20 நாடுகள் தேவையான உத்வேகத்தை பெறும். உலக நிலப்பரப்பில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுக்க இந்தியா முன்னுதாரணமாக திகழும்.
கடன் அளவு அதிகரிப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு போன்ற பல உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, வங்கிகளை வலுப்படுத்த வேண்டியது தற்போது மிகவும் அவசியமானது.
கரோனா பேரிடர் மற்றும் உலக அளவில் ஏற்பட்டுள்ள புவிசார் பதற்றங்கள் சர்வதேச பொருளாதாரத்தை இன்னும் பாதிப்படைய செய்யக்கூடிய காரணிகளாக உள்ளன. மேலும், இவை பல நாடுகளின் நிதி நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி, நம்பிக்கை, ஸ்திரத்தன்மையை மீட்டுக்கொண்டு வருவது ஜி20 நாடுகள் முன்பு உள்ள முக்கிய பணியாக உள்ளது. ஆனால், இது எளிதான காரியம் அல்ல.
ஒருங்கிணைந்த கொள்கை: நுகர்வோர், தயாரிப்பாளர்கள் என இந்தியாவில் அனைத்து தரப்பினரும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதே நேர்மறையான உணர்வை நீங்களும் உலகப் பொருளாதாரத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
உலக அளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது ஜி20 நாடுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச பொருளாதார தலைமைகள் ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுப்பதால் மட்டுமே மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.
இதைத்தான் ஜி20 தலைமைக்கான கருப்பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற தத்துவத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
உலக மக்கள்தொகை 800 கோடியை தாண்டியபோதிலும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் என்பது தொய்வடைந்த நிலையில்தான் உள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உலகின் நிதிசார் நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிஅபரிமிதமாக உள்ளது. தொற்றுநோய் காலங்களில் டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றங்கள் மூலம்தடையற்ற நிதி சேவை உறுதிப்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் நிதி பரிவர்த்தனையில் ஸ்திரமின்மை மற்றும் அவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தேவையான தர நிலைகளை ஜி20 உறுப்பு நாடுகள் உருவாக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தனது டிஜிட்டல் பேமென்ட்சேவைகளில் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன்மூலம், நாட்டின் நிர்வாகம், நிதி பரவல், வாழ்க்கை முறை எளிதானதாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது, இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறையை பின்பற்ற பல நாடுகள் நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.