இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -தமிழ் மகன் உசேன்

சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, இன்று “நிரந்தர பொதுச்செயலாளர்” குறித்து பேசியிருப்பது ஓபிஎஸ், சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமி மாறி வருகிறார். 

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று  தீா்ப்பு அளித்தது.  

இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நடைமுறைகள் செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இன்று ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், “அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றத்தின்  வரவேற்கத்தக்க தீர்ப்பு. இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்த நிலையில்தான் உள்ளது. கட்சியில் பிளவு என்பது எல்லாம் இல்லை. அதிமுகவின் இனி நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் இதைப் பார்ப்பீர்கள். மேலும் சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என்று தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தோன்றிற் புகழோடு தோன்றுக! புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.