புதுடெல்லி: பீகாரின் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளான சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக் குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திர பிரகாஷ் சிங், சந்திரசேகர் ஜா ஆகிய 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்களின் ஓய்வூதியத்திற்கான பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) கணக்கு திடீரென மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர். இந்த மனு குறித்து கடந்த 21ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் கவனத்திற்கு வந்த போது, ‘‘என்ன? நீதிபதிகளின் ஜிபிஎப் கணக்கு மூடப்பட்டுள்ளதா?’’ என அதிர்ச்சி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நீதிபதிகள் மனு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜுக்கு உத்தரவிட்டார். வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
