பெங்களூரு: உலக பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிதி தன்மை, கடன் நெருக்கடி போன்ற சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூருவில் இன்று (பிப்.24) நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் கவர்னர்களின் கூட்ட தொடக்க நிகழ்வில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சமீப மாதங்களில் வெளிப்படையாக பார்க்கும் போது உலகப்பொருளாதாரம் சற்று மேம்பட்டு இருப்பது போல தோன்றுகிறது. உலகம் பெரிய மந்தநிலையை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சிறிய அளவிலான மந்தநிலையையும், மெதுவான வளர்ச்சியையும் அனுபவிக்கலாம் என்றாலும் நிச்சயமற்றத்தன்மை பெரிய சவாலாக நம்முன் இன்னும் உள்ளது.
நிச்சயமில்லாத நிதிநிலைமை, கடன் அழுத்தம், காலநிலை நிதி, உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு, மற்றவர்கள் மீதான மதிப்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் போன்ற குறுகிய அல்லது நீண்ட கால சவால்களுக்கான தீர்வுகளை நாம் ஒன்றிணைந்து தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும். உலக பொருளாதார ஒத்துழைப்பை பெரிய அளவில் நாம் ஊக்குவிக்க வேண்டும். மேலும் அதனை நீடித்த, நிலையான, வலுவான ஒருங்கிணைந்த வளர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்த வேண்டும்.
ஜி20 நாடுகள் மற்றத்திற்கான பயணத்திற்கு தயாராக உள்ளது, நிதி பாதையில், சவால்களை எதிர்கொள்வதில் பலதரப்பட்ட மன்றமாக ஜி 20யின் முயற்சிகள் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன. இவ்வாறு ஆர்பிஐ கவர்னர் பேசினார்.
தனது தொடக்க உரையின் போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,”இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த 2023 ஆம் ஆண்டின் ஜி20 நாடுகளின் விவாதங்கள் உலகை அழுத்தும் சவால்களுக்கு முழுமையான தீர்வுகளை ஆராய்வதில் கவனம் செலுத்தும்.
ஜி20 நாடுகளின் தேவைகள் சூழல்களுக்கு மதிப்பளித்து உறுப்பு நாடுளின் எல்லைகடந்த ஒற்றுமையின் மூலம் உலக மக்களின் வாழ்வில் மாற்றத்தினை கொண்டுவர முடியும். இது புதிய சிந்தனைகளுக்கான இடமாகவும், உலகின் தெற்கு பகுதியின் குரல்களை கேட்கும் அரங்கமாகவும் இருக்கும்” என்றார்.
ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மத்திய வங்கிகளின் கவர்னர்களுக்கான கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாக இந்தியாவின் தலைமையில் நடைபெறுகிறது.