கண்களை களவாடிய கலையுலக தாரகை : காற்றில் கலந்த காவிய “மயில்” ஸ்ரீதேவி

* வசந்தகால நதியினில் வலம் வந்து, செந்தூரப் பூவாய் ஜில்லென்ற காற்றில் மலர்ந்து, கண்ணே கலைமானே என கவி பாடி, கன்னி மயிலாய் உருவெடுத்து, காலைப் பனியில் ஆடும் மலராய் காட்சி தந்து, கவிக்குயிலாய் கானம் பாடி, காற்றில் கீதமாய் ஒலித்தவள். இளமை எனும் பூங்காற்றாய் இதயத்தில் நுழைந்தவள். கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் என்ற கள்வனால் களவாடப்பட்டு காற்றில் கரைந்தவள். கனவுலக தாரகை ஸ்ரீதேவியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

* 1970 மற்றும் 80களில் தமிழ் திரையுலகின் தனிப் பெரும் நாயகியாக பார்க்கப்பட்டவர். அழகு, திறமை இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற ஆற்றல் மிகு நடிகையாக அறியப்பட்டவர். இன்று 50 வயதை கடந்த அநேகரின் இதயங்களை கொள்ளை கொண்ட அபூர்வ கலை தேவதையாக ஆராதிக்கப்பட்டவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

* 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, தமிழகத்திலுள்ள சிவகாசியில், அய்யப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு மகளாகப் பிறந்து, இந்தியத் திரையுலகின் தலைசிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.

* 1969ஆம் ஆண்டு இயக்குநர் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த “துணைவன்” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் ஸ்ரீதேவி.

* தொடர்ந்து “நம்நாடு”, “பாபு”, “கனிமுத்து பாப்பா”, “வசந்த மாளிகை”, “பாரதவிலாஸ்”, “திருமாங்கல்யம்” போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த இவர், 1976ஆம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார்.

* 1977ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான “16 வயதினிலே” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த “மயில்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனங்களையும் வென்றெடுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

* “காயத்ரி”, “கவிக்குயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “ப்ரியா”, “தர்மயுத்தம்”, “கல்யாணராமன்”, “பகலில் ஓர் இரவு”, “குரு”, “வறுமையின் நிறம் சிவப்பு”, “ஜானி”, “மூன்றாம் பிறை” என தொடர்ந்து வந்த இவரது திரைப்படங்கள் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்ததோடு, இவரின் பண்பட்ட நடிப்பை பறைசாற்றும் விதமாகவும் அமைந்தன.

* “ராணி மேரா நாம்”, “ஜுலி” ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை ஸ்ரீதேவி, “16 வயதினிலே” திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பான “சோல்வா சாவன்” என்ற திரைப்படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு முதன் முதலாக நாயகியாக ஹிந்தி திரையுலகில் தடம் பதித்தார்.

* பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட “மூன்றாம் பிறை” திரைப்படம், ஹிந்தியில் “சத்மா” என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு, ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது. அதன்பின் வெளிவந்த “ஹிம்மத்வாலா”, “சாந்தினி” திரைப்படங்களின் வெற்றி பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியையும் இணைத்தது.

* தமிழில் கமல் மற்றும் ரஜினியின் ஜோடியாக பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி, “விஸ்வரூபம்”, “சந்திப்பு” ஆகிய திரைப்படங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஜோடியாகவும் நடித்து பெருமைக்குரியவரானார்.

* 1970 மற்றும் 80களில் கமல், ஸ்ரீதேவி ஜோடி தமிழ் திரைப்பட ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு ஒரு வெற்றி ஜோடியாக பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனோடு மட்டும் ஏறக்குறைய 27 திரைப்படங்கள் வரை இணைந்து நடித்திருக்கின்றார் நடிகை ஸ்ரீதேவி.

* தமிழ் நாட்டிலிருந்து வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ரேகா போன்ற திறமையான நடிகைகள் தங்களது தனித்தன்மை கொண்ட நடிப்பாற்றலால் பாலிவுட்டில் கோலோச்சியிருந்திருந்தாலும், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற தனிப்பெரும் அந்தஸ்துடன் ஒரு ஆற்றல்மிகு நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.

* தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, ஹிந்தியிலும் ஏராளமான வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்த இவர், 1996ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அனில்கபூரின் சகோதரரும், திரைப்பட தயாரிப்பாளருமான போனிகபூரை மணம் முடித்து, சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி, மிக நீண்ட இடைவெளிக்குப் பின், 2012ஆம் ஆண்டு வெளிவந்த “இங்கிலீஷ் விங்கிலீஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் மறு பிரவேசம் செய்தார்.

* தனது நீண்ட நெடிய கலையுலகப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 275 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் இந்த கலையுலக தேவதை, இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான “பத்மஸ்ரீ விருது” உட்பட ஏராளமான விருதுகளை பெற்று தனது வாழ்நாள் முழுவதும் கலையுலகிற்கு பெருமை தேடித்தந்த சீர்மிகு திரைக்கலைஞராகவே வாழ்ந்திருந்தார்.

* துணைவனில் வந்து, இணையற்ற நடிப்பை தந்து, அனைவரின் மனங்களில் நின்று, உனை மறவா நினைவுகள் ஆயிரம் தந்து, தமிழ் மண்ணை மறந்து, விண்ணை அடைந்த இந்த மண்ணின் மகளான, நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளான இன்று, அவரை நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.