வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. ஒரு மனிதனின் வெற்றி என்பது அவன் அந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறான் என்பது பொருத்தே அமையும்.
பெரும்பாலான மக்கள் மாதம் முழுவதும் வேலை செய்து விட்டு மாத இறுதியில் சம்பளத்திற்காக காத்திருக்கிறார்கள். வேறு சிலர் தங்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விட்டார்கள். அவர்கள் வேலை செய்தாலும், வேலைக்கு செல்ல விரும்பவில்லை என்றாலும் அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க படும்.
இது எவ்வாறு சாத்தியம்?
தங்கள் நேரத்தை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு இது சாத்தியமே.

சராசரி மனிதர்கள்:
நம்மில் பலரும் ஓர் சராசரி வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். வாரம் ஐந்து நாட்கள் வேலைக்கு செல்கிறோம், வார இறுதியில் விடுமுறை நாட்களை கொண்டாடுகிறோம். சில நேரங்களில் வெள்ளிக்கிழமை எப்போது வருமென காத்திருக்கிறோம்.
வருடத்திற்கு 21 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்கிறது நாம் பணிபுரியும் நிறுவனம். இதுபோக இன்னும் சிறப்பாக பணிசெய்தால் “Performance Bonus” தருகிறது. இது போதாதா வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு? என்று பலர் எண்ணுகிறார்கள்.

நம் நாளைய தினமும் இன்று போலவே இருக்கும் என்றெண்ணி அலட்சியமாக இருந்துவிடுகிறோம். நம் நேரத்தை பணயமாக வைத்து பணத்தை பெறுகிறோம்.
– ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு மணி நேர சம்பளம்.
– ஒரு மாதம் வேலை செய்தால் ஒரு மாத சம்பளம்.
– ஒரு வருடம் வேலை செய்தால் ஒரு வருட சம்பளம்.
ஆனால் நம்மால் நேரத்தை கொடுக்க முடியவில்லை என்றால் நமக்கு பணம் கிடைக்காது.
வாகன ஓட்டுனரும், மருத்துவரும்:
ஒரு வாகன ஓட்டுநர் தினமும் 9 மணி நேரம் வாகனம் ஓட்டுகிறார் ஆனால் அதிலிருந்து அவருக்கு கிடைக்கும் வருமானம் போதவில்லை. ஆதலால் தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாக வேலை செய்கிறார். அப்போதும் பணம் போதுமானதாக இல்லை. சரி இரவு நேரங்களிலும் வேலைக்கு சென்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று இரவு நேரங்களிலும் வாகனம் ஓட்டுகிறார்.
ஆனால் அவரது உடல் சோர்வடைய தொடங்கியது, சரியான தூக்கம் இல்லை, நேரத்திற்கு சாப்பிட முடிவதில்லை, அது அவருக்கு உடல் ரீதியாக பல இன்னல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரால் நேரத்தை பணயமாக வைத்து பணம் சம்பாரிக்க முடியவில்லை.

மறுபுறம் ஓர் மருத்துவர், மருத்துவமனையில் நீண்ட நேரம் பணிபுரிகிறார் ஆனால் அவருக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்பதால் தனியாக ஒரு கிளினிக் வைக்கிறார். மருத்துவமனையில் வேலை முடிந்ததும் கிளினிக் வந்து மக்களின் நோய்களை கேட்டு அதற்கான ஆலோசனைகளும் , மருந்துகளும் வழங்குவார்.
இவரும் பணத்திற்காக தன் நேரத்தை பணயமாக வைக்கிறார். ஒரு சராசரி நபரை விட மருத்துவர் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதற்காக அவர் பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டார் என்று சொல்ல இயலாது.
ஓர் சராசரி நபர் இரண்டு லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டினால், ஓர் மருத்துவர் பத்து லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டுகிறார், ஒரு சராசரி நபர் 15 லட்சம் மதிப்புள்ள வீட்டில் வசிக்கிறார், ஒரு மருத்துவர் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டில் வசிக்கிறார். அவரவரின் வரவிற்கு ஏற்ப செலவு செய்கிறார்கள்.

நம் கதையில் பார்த்த ஓட்டுனருக்கும் சரி மருத்துவருக்கும் சரி பெரிய வேறுபாடு இல்லை. இருவரும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்களோ அதற்கேற்ப பணத்தை பெறுகிறார்கள். எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அல்லது இனி அவர்கள் வேலை பார்க்க முடியாத சூழல் அமைந்தால் அவர்களால் நேரத்தை கொடுக்க இயலாது அப்போது அவர்களுக்கு பணம் கிடைக்காது.
அதன் பிறகு அவர்களின் வாழ்வாதாரம் என்ன?
பொருளாதார சுதந்திரம் அடைந்த நபர்:
சிலர் நாளையும் இன்று போல் இருக்காது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேலை செய்யும் காலத்திலேயே உழைப்பில்லா வருமானம் பெற முயற்சி செய்கிறார்கள்.
தினமும் 9 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதுதவிர தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள அல்லது வேறு தொழில் கற்றுக்கொள்ள அல்லது முதலீடுகள் பற்றி தெரிந்துகொள்ள தங்கள் நேரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஒருவர் தினமும் 2 மணி நேரத்தை தன் தனித்திறனை வளர்த்துக்கொள்ள ஒதுக்கி வைக்கிறார். காலை ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம். ஒரு வருடத்தின் இறுதியில் அவருக்கு 730 மணி நேரம் கூடுதலாக கிடைத்திருக்கிறது. தன் அன்றாட வேலையை தவிர ஒரு புது திறனை அவர் வளர்த்துக்கொண்டுள்ளார்.
உதாரணத்திற்கு, ஒருவர் முதலீடுகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் அதில் திறம்பட செயல் படவும் 730 மணி நேரத்தை செலவிடுகிறார். அவரின் தேவைக்கான பணத்தை தவிர மீதம் உள்ள பணத்தை சீராக முதலீடு செய்கிறார், முதல் இரண்டு முதல் மூன்று வருடங்கள் கடினமாக இருந்தாலும் காலப்போக்கில் அவரின் மாத வருமானத்தை விட, தன் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாக இருந்தது.
இப்பொது அவரது நேரத்தை பணத்திற்காக பணயம் வைக்கின்ற தேவை இல்லாமல் போனது. அவர் செய்த முதலீடுகள் அவருக்காக உழைத்துக்கொண்டு வருமானத்தை கொடுத்து கொண்டே இருக்கும்.
இன்றைய பொருளாதார திட்டம் நாளைய பொருளாதார சுதந்திரம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.