நியூயார்க்: சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் குற்றம் சாட்டியு்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
இந்த சூழலில் உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைன் மற்றும் 60 நாடுகள் இணைந்து தாக்கல் செய்த இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “ஐ.நா. விதிகள், சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதன்காரணமாக பிராந்திய அமைதி சீர்குலைந்துள்ளது. சர்வதேச அளவில் பதற்றம் எழுந்திருக்கிறது. போர் என்பது மிகப்பெரிய பிரச்சினை. எந்தவொரு பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்திய அரசு சார்பில் இரு நாடுகளின் தலைவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஐ.நா. சபையில் இந்தியாவின் சார்பில் காந்தியின் சிந்தனை, கொள்கை என்ற தலைப்பில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காந்தியின் அகிம்சை கொள்கை எடுத்துரைக்கப்பட்டது. உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது.