சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ அங்கீகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாடும் அதிமுக…!

டெல்லி,

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் கட்சி விதிகளை பின்பற்றி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

எதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேலுமுறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டு நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாட உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் நகலை இன்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சமர்ப்பிக்க உள்ளது.

இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக முறையீட உள்ளது.

இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்ததற்கான தீர்ப்பின் ஆவணங்களை வழங்குகிறார்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.