ராயப்பேட்டையில் இன்று அதிகாலையில், வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயன்ற போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுக்காலமாக வசித்து வருகிறார். பிரபு தனது வீட்டில் இன்று அதிகாலை குடும்பத்துடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து பிரபுவின் குழந்தையைக் கடத்த முயன்றிருக்கிறார். இதனைப் பார்த்த குழந்தையின் பெற்றோர், அந்த நபரைப் பிடிக்க முயன்றிருக்கின்றனர். அந்த நபர் திடீரென வீட்டு வாசலில் விழுந்துவிட்டார்.
அவரை எழுப்பியபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, பிரபு காவல் கட்டப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். நாங்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, அந்த நபரைக் கைதுசெய்தோம்.

தொடர்ந்து அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் ராயப்பேட்டை பகுதியில் சாலை ஓரத்தில் வசிக்கும் புருஷோத்தமன் என்பதும், போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.