திருமலை: திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும், மே மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதேபோல், மார்ச் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான விர்சூவல் சேவா டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த கட்டண சேவைக்காக முன்பதிவு செய்யும் பக்தர்கள் ₹300 தரிசன வரிசையில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சேவையில் பங்கேற்க இயலாது. எனவே, பக்தர்கள் தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in/#/login அல்லது ttdevasthanam என்ற மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.