திருமணத்துக்கு முன்தினம் திடீர் அட்மிட் மருத்துவமனையில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்: டாக்டர்கள், நோயாளிகள் வாழ்த்து

திருமலை: திருமணத்துக்கு முன்தினம் மணமகள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், மணமகன் மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய சம்பவம் தெலங்கானாவில் நடந்தது. தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம், சென்னூர் மண்டலத்தை சேர்ந்த பனோத் ஷைலஜா என்ற இளம்பெண்ணுக்கும், ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் பஸ்வராஜு பல்லே கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை லம்பாடிப்பள்ளியில்  திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், மணப்பெண் ஷைலஜாவுக்கு கடந்த 22ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் மஞ்சரியாலா ஐ.பி. சவுரஸ்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், மருத்துவர்கள் அவருக்கு  அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர் ஒருவாரம் படுக்கையில் ஓய்வு தேவை என்று டாக்டர்கள் கூறியதால் ஷைலஜா உள்நோயாளியாக இருந்தார். இதனால் மணமகன் ஹட்கர் திருப்பதி கவலையடைந்தார். இரண்டு குடும்பங்களும் ஏழ்மையில் இருப்பதால், திருமணத்தை தள்ளிவைத்தால் மீண்டும் பணம் செலவாகும் என்று கருதி  எப்படியும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தொடர்ந்து ஷைலஜா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம்  கூறினார். மணமகனின் நல்ல உள்ளத்தை புரிந்து கொண்ட மருத்துவர்கள் திருமணத்தை அனுமதித்தனர்.   மருத்துவர்களும் திருமண  வீட்டாராக மாற அங்கிருந்த சக நோயாளிகளின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் மருத்துவமனை கட்டிலில் இருந்த ஷைலஜாவுக்கு, ஹட்கர் திருப்பதி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் மலர் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.