புதுடெல்லி: திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், வரும் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயாவில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் வரும் 26ம் தேதி (பிப். 26) டெல்லியில் அதன் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘நாளை மறுநாள் நடைபெறும் மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் முன்னேற்பாடுகள், இந்தாண்டில் வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இது தவிர, பாஜகவின் பலவீனமான 160 எம்பி தொகுதிகளை வலுப்படுத்த கட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். மேலும் ஜி – 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பதால், அதற்கான இலக்கிய நிகழ்ச்சிகள், வெபினார்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பாஜக நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது’ என்றனர்.