ஹைதராபாத்: ஹைதராபாத் அம்பர்பேட்டையை சேர்ந்த கங்காதர் என்பவரின் மகன் பிரதீப் (4). கடந்த 19-ம் தேதிவிளையாடச் சென்ற சிறுவன் பிரதீப் கையில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்துள்ளன.
அப்போது, அப்பகுதியில் உள்ள சுமார் ஐந்தாறு தெரு நாய்கள், சிறுவன் பிரதீப்பை சுற்றி வளைத்து கடித்து குதறின.தம்பியின் அலறல் சத்தம் கேட்டுஅவனது சகோதரி மேக்னா ஓடிவந்தாள். அங்கு தம்பியை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அழுது கொண்டே ஓடி தந்தையிடம் கூறினாள்.
கங்காதரும் பதறியபடி ஓடிச் சென்று நாய்களை விரட்டி விட்டு,உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரதீப்பை ஆட்டோவில் அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஏற்கெனவே சிறுவன் பிரதீப் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு தெலங்கானா மாநிலத்தில் மட்டுமல்லாது ஆந்திரா, தமிழகம், கர்நாடகம்என பல மாநிலங்களில் வைரலானது.
இந்நிலையில், ஊடகங்கள் மூலம் பரவிய செய்திகளின் அடிப்படையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
பின்னர், ‘‘இந்த சம்பவத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான் காரணம். ஹைதராபாத்தில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாய்கள் கடித்து உயிரிழந்த சிறுவன் பிரதீப் குடும்பத்துக்கு மாநகராட்சி உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தெரு நாய்களை பிடிக்க ஹைதராபாத் மாநகராட்சி உட்பட தெலங்கானாவில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளும் உத்தரவிட்டதன் அடிப்படையில் நாய்கள் பிடிக்கும் படலம் தெலங்கானா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.