நீட் தேர்வு விவகாரத்தில் புதிய மனு: முந்தைய வழக்கை திரும்பப் பெற்றது தமிழக அரசு

புதுடெல்லி: புதிய மனுவை தாக்கல் செய்த நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட முந்தைய ரிட் மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இந்த ரிட் மனுவை திரும்பப் பெற அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக, மருத்துவப் படிப்புக்குள் நுழைய நீட் தேர்வு கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கலான பல்வேறு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை தமிழக அரசு அளித்தது. ஆனால், அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

எனவே, மீண்டும் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோல் நீட் கட்டாயம் என்ற மருத்துவ கவுன்சில் விதியை எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது புதிய மனுவை (ஒரிஜினல் சூட்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதனிடையே, ‘தமிழ்நாடு அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், ஒன்றிய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் (Original Suit) இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்று, புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.