மதுரை: நூறு நாள் வேலைத்திட்ட பணியை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா என அரசுத் தரப்பில் விளக்கமளிக்குமாறு ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளுக்கான பொறுப்பாளர் 90 நாட்களையும் கடந்து, கடந்த 7 மாத காலமாக பணியில் தொடர்கிறார். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் தனிநபர் விவசாய நிலத்தில் வேலைகள் நடக்கின்றன.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘நூறு நாள் வேலைத் திட்ட பணியை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிக்க முடியுமா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.