திருச்சி : திருச்சியில் பகலில் வெயிலும் இரவில் குளிரும் என இருவிதமான சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கோடை காலத்தில் மார்ச் மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயிலாக உச்சம் தொடும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட வெயில் அதிகமாகவே இருக்கும். திருச்சியில் அதிகபட்சமாக 110 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து 35 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை என்ற அளவில் வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு வெயில் கடுமையாக சுட்டெரிக்குமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
கடந்த 1901 ம் ஆண்டுக்கு பிறகு 2010ம் ஆண்டு அதிகபட்சமாக இந்தியாவில் 33 டிகிரி செல்சியஸ் வெயில் அளவு பதிவாகி இருந்தது. இதன்பின்னர் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெயில் அளவு 33.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியதே அதிகபட்ச வெப்பநிலை. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் முன்கூட்டியே வெயில் அதிகரிப்பதை பார்க்கும் போது கடந்த கால அதிகபட்ச வெப்ப நிலையை கடந்து புதிய சாதனை ஏற்படுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து 35 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை என்ற அளவில் வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் ஜூஸ் கடைகள், தர்ப்பூசணி, இளநீர், பதநீர், நூங்கு எனத் தேடி ஓடத் துவங்கியுள்ளனர். வெயில் அதிகரித்ததால் பகல் நேரத்தில் சாலைகளில் வழக்கமான போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
பகலில் இந்த நிலை என்றால் இரவில் 10 மணிக்கு மேல் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த இருவேறு விதமான காலநிலை மாற்றம் ஒவ்வாமல் பல இடங்களில் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல், இருமலுக்கு ஏராளமான பேர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகின்றனர்.அதேநேரத்தில் குளிர் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.