புதுடில்லி என்.ஐ.ஏ., சமீபத்தில் எட்டு மாநிலங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் வன்முறை கும்பலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத அமைப்புகள் வன்முறையை துாண்டும் வகையிலும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், கிரிமினல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவிகள் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
அதிரடி சோதனை
இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குகள் பதிவு செய்து விசாரித்தது.
அப்போது, கிரிமினல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு, பயங்கரவாத அமைப்புகள் நிதி உதவி செய்து வருவது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மஹாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் புதுடில்லியில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சோதனை குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
இச்சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வட அமெரிக்க நாடான கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான லக்கி ஹோகர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
சமீப காலமாக பஞ்சாபில் நடந்த தாக்குதல், கொலை, கடத்தல் சம்பவங்களில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
இவர் தவிர லக்வீர் சிங், ஹர்பிரீத், தலிப் பிஷ்னோய், சுரீந்தர், ஹரி ஓம் ஆகியோரும் என்.ஐ.ஏ., சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
சமூக வலைதளம்
இவர்களுக்கு கிரிமினல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது.
மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, ஆயுத கடத்தல், கொலை, கொள்ளை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்