புதுடெல்லி: கோதுமை பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 20 லட்சம் டன் முதல் 25 லட்சம் டன் வரையிலான கோதுமையை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ”பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் கொடுமையானது. பாகிஸ்தானுக்கு இந்தியா 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மோடு இருந்தவர்கள்தான் அவர்கள்.
நம்மை தொடர்ந்து தாக்கும் நாடு; 1948, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் நம்மீது போர் தொடுத்த நாடு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், அந்த நாட்டுக்கு கோதுமையை கொடுத்து இந்தியா உதவ வேண்டும் என்றுதான் இந்தியர்கள் எண்ணுகிறார்கள். ஏனெனில், எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் நமது கலாச்சாரம். எனவே, மதங்களுக்கு அப்பாற்பட்டு நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானியர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (பிப். 24) பேட்டி அளித்த கிருஷ்ண கோபால், ”நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது எனது உணர்வை வெளிப்படுத்தினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு கோதுமை அனுப்புவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் மட்டுமல்லாது வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்ற பொருளாதாரமும் இல்லாததால் அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்நாட்டுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன் விவரம் > பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ஈரான், சீனா உதவிக்கரம்!