புதுடெல்லி: பிரதமர் மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கிண்டல் செய்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால், அவரை அசாம் போலீஸார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்றார். அப்போது அவர் ‘‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மோடி பயப்படுவது ஏன்? முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அமைத்தனர். இதில் நரேந்திர கவுதம்தாஸுக்கு என்ன பிரச்சினை? மன்னிக்கவும் தாமோதர்தாஸுக்கு என்ன பிரச்சினை? எனக்கு உண்மையிலேயே இதில் குழப்பம்ஏற்படுகிறது. பெயர் தாமோதர்தாஸ், ஆனால் வேலை எல்லாம் கவுதம்தாஸ் போல் உள்ளது’’ என கூறினார். தாமோதர்தாஸ் என்பது மோடியின் தந்தை பெயர். கவுதம் என்பது அதானியின் முழுப் பெயர். இதை பவன் கேரா மாற்றிக் கூறி கிண்டல் அடித்தார்.
இது குறித்து அசாமில் சாமுவேல்சாங்சன் என்பவர் திமா ஹசா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பவன் கேரா மீதுவழக்குகள் செய்யப்பட்டு, அவரை கைது செய்ய அசாம் போலீஸார் டெல்லி வந்தனர். ராய்ப்பூரில் இன்றுதொடங்கும் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பவன் கேரா இதர காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி விமான நிலையம் வந்து, இண்டிகோ விமானத்தில் ஏறினார். அவரை கைது செய்ய, டெல்லி போலீஸார் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீஸாரின் உதவியை அசாம் போலீஸார் நாடினர்.
இதையடுத்து பவன் கேராவிமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். ஏதோ சூழ்ச்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்த காங்கிரஸ்மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீன் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் விமானத்தை விட்டுஇறங்கி போராட்டம் நடத்தி மோடிஅரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால், மற்ற பயணிகளும் விமானத்தை விட்டு இறக்கப்பட்டு வேறுவிமானத்தில் ஏற்றப்பட்டனர். அதன்பின் பவன் கேரா கைது செய்யப்பட்டார்.
‘‘இச்சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த அராஜக நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என காங்கிரஸ் கூறியது.
பவன் கேராவுடன் சென்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா நேட் கூறுகையில், ‘‘பிரதமரை விமர்சித்ததற்காக கைது என்கின்றனர். இது தான் பேச்சுரிமையா? வாய் தவறி பிரதமர் மோடியின் பெயரை மாற்றி கூறிவிட்டார். இந்திரா காந்தி குடும்பத்தினர், ஏன் நேரு பெயரை தங்கள் பெயருடன் சேர்க்கவில்லை என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். ஆனால் எங்கள் தலைவர்கள் கேள்வி எழுப்பினால் கைது செய்கிறார்கள்.’’ என்றார்.
பவன் கேரா கைது குறித்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எம்.சிங்விநேற்று உடனடியாக மனு செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று மாலை 3 மணிக்கு விசாரித்தது. ஏ.எம்.சிங்வி வாதிடுகையில், ‘‘எப்.ஐ.ஆர்-ல் பவன் கேராவுக்கு எதிரான குற்றங்களுக்கு கைது நடவடிக்கை தேவையில்லை. அவையெல்லாம் பொருத்தமற்ற வழக்குகள். இது பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை’’ என்றார்.
பிரதமர் பற்றி பவன் கேரா பேசிய ஆடியோவை, அசாம் போலீஸ்சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாதி நீதிமன்றத்தில் ஒலிபரப்பினார். ‘‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிராக இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளை பவன் கேரா பயன்படுத்த முடியாது’’ என்றார்.
இந்த வழக்கை பிப்ரவரி 27-ம்தேதி விசாரிப்பதாக கூறிய உச்சநீதிமன்றம், வரும் 28-ம் தேதி வரை பவன் கேராவை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. வழக்குகளை மொத்தமாக விசாரிப்பது தொடர்பாக அசாம், உத்தர பிரதேச அரசுகள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.