கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில், மதிமுக தேனி மாவட்ட செயலாளர் கம்பம் விஎஸ்கே.ராமகிருஷ்ணன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. மணமக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி வைகோ பேசுகையில், ‘‘பெரியாறு அணையை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது வரை கேரள அரசு, பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதாக தகவல் தெரிவித்து வருகிறது.
கேரள அரசு புதிய அணையை கட்டினால், பெரியாறு அணையை நம்பியுள்ள 5 மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். அதுபோல் நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்தினால் தேனி, இடுக்கி மாவட்டங்கள் அழிவிற்கு செல்லும் அபாய நிலை ஏற்படும். எனவே கேரள அரசு புதிய அணையை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மீண்டும் தேனி மாவட்டத்தில் போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.