மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் தமிழகம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை அ.தி.மு.க கட்சியினரும் தமிழக மக்களும் தமிழ்நாடு முழுவதுமாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்த தினம் ஆகும். இதனையொட்டி அவரது கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக திருமயம் அருகே உள்ள லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்தப்பட்டன. பெரிய மாடு சிறிய மாடு மற்றும் கரிச்சான் மாடுகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பெரிய மாடுகளுக்கு எட்டு கிலோமீட்டர் தூரமும் சிறிய மாடுகளுக்கு ஆறு கிலோமீட்டர் தூரமும் கரிச்சான் மாடுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டு சாலைகளில் சீறிப்பாய்ந்த மாடுகளை பொதுமக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.