புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஷஹிலேந்திரா திருப்பாதி என்பவர் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்த பொது நல மனுவில்,‘‘நாடு முழுவதிலும் உள்ள மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோருக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலியினை மனதில் கொண்டு விடுப்பு வழங்க வேண்டும். ஏராளமான தனியார் நிறுவனங்கள் இத்தகைய விடுப்புகளை வழங்கி வருகின்றன. அதனால் மகப்பேறு சட்டத்தில் இதற்காக சில மாற்றங்களை செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் உச்ச நீதிமன்றம் தலையிடவோ, இதுகுறித்து விசாரணை நடத்தவோ முடியாது. அதே நேரத்தில் மனுவின் கோரிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை மனுதாரர் நாடலாம்’’ என உத்தரவிட்டார்.
