மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம்,பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்துள்ளது.
மாதவிடாய் காலத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உலக அளவில் இருந்து வருகிறது அந்தவகையில் இதற்கான அரசியல் ரீதியான முன்னெடுப்பை ஐரோப்பா அளவில் ஸ்பெயின் எடுத்துள்ளது.
பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதா ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 185 பேரும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர்.
பணிக் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் நாடு ஸ்பெயின் மட்டுமல்ல.. இதற்கு முன்னரே ஏராளமான நாடுகள் மாதவிடாய் காலங்களில் விடுமுறை எடுக்கும் உரிமையை பெண்களுக்கு அளித்துள்ளன.
* ஜப்பானில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் தொடர்பாக விடுப்பு கேட்டால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்ற முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.
* இந்தோனேசியாவில் 1948 ஆம் ஆண்டே மாதவிடாய் விடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மாதவிடாய் விடுப்பு கேட்கும் பெண்களுக்கு நிறுவனங்கள் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.
* தென்கொரியாவில், சட்டம் 73-ன் படி ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* தைவான் – சட்டம் 14-ன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் விடுமுறையை பெற்றுக் கொள்ள உரிமை உள்ளது என்று கூறுகிறது.
*ஜாம்பியாவில் பெண்கள் மாதவிடாயை காரணம் காட்டி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
* வியட்நாமில் பெண்கள் மாதவிடாயை குறிப்பிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளாம். இதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படாது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மாதவிடாய் விடுமுறை என அரசங்கத்தில் தனியாக சட்டம் எதுவும் இல்லை, ஆனால் தனியார் நிறுவனங்கள் சில தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பெண்களுக்கு விடுமுறை வழங்கி வருகின்றன. விரைவில் இந்தியாவிலும் மாதவிடாய் விடுப்பு தொடர்பான மசோதா அறிமுகப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்..