இந்தியா முழுவதும் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை, பிப்ரவரி 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் வழங்கி இருந்தது.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இம்மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.

பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இன்று, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், `மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கபடுகையில், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊக்கம் குறைந்து போகலாம்’ என தலையீட்டாளர் (intervenor) தரப்பு வாதத்தை சமர்பித்திருந்தார்.

இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “மாதவிடாய் விடுப்பு வழங்குமாறு நிறுவன முதலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களைத் தடுக்கலாம் என்பது உண்மைதான்.
இந்த வழக்கின் கொள்கை பரிமாணத்தைப் பார்க்கையில், மனுதாரர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினை அணுகி பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யலாம்” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.