இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அரசு முறை பயணத்தின் போது, விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்யவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
பொருளாதார சீரழிவை சமாளிக்க, சர்வதேச நிதியத்தில் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பு, பல கட்டுப்பாடுகளுடன், இந்திய மதிப்பில் 54 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தர சம்மதித்துள்ளது.
இதுகுறித்து ஆலோசிக்க பாக்., அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பின், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் வைத்தும், சர்வதேச நிதியத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றவும் கடும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
![]() |
எனவே அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இனி அரசு முறைப்பயணமாக விமானங்களில் செல்லும்போது சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்ய வேண்டும்.
அதேபோல, பயணத்தின்போது உடன் உதவியாளரை அழைத்துச் செல்லவும் அனுமதி கிடையாது. இந்தப் பயணங்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்படுகிறது.
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், மேலும் பல சிக்கன நடவடிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்