விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?

நடிகர் விஷால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. விஷால் மற்றும் ஜூனியர் கலைஞர்கள் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென லாரி பிரேக் பிடிக்காமல்போனது. யாரும் எதிர்பாராத இந்த விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. ஆனால், இந்த வீடியோவை பகிர்ந்த விஷால், கடவுளின் அருளால் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோவில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்படுவது தெரிகிறது. அப்போது லாரி ஒன்று வருவதுபோல் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் லாரி குறிப்பிட்ட தொலைவில் நிற்காமல் திடீரென பிரேக் பிடிக்காமல் வேகமாக வந்துள்ளது. இதனைப் பார்த்த படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். நடிகர் விஷாலும், லாரி பிரேக் பிடிக்காமல் வரும்போது அங்கேயே படுத்திருக்கிறார்.

இருப்பினும் எல்லோரும் பத்திரமாக விபத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். காயம் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் யாருக்கும் ஏற்படவில்லை. 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கும்போது, அந்த லாரி படப்பிடிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் தற்காலிக வாகனம். அது பரமாரிப்பு ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. மார்க் ஆண்டனி படப்பிடிப்புக்காக பயன்படுத்தும்போது, லாரியில் பிரேக் பிடிக்காமல் போனது தெரியவந்திருக்கிறது. இந்த விபத்துக்குப் பிறகு படக்குழுவினர் சற்று விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இதே படப்பிடிப்பு தளத்தில் இந்தியன் 2 சூட்டிங்கின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.