சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் ஆடிட்டர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் ராம்ஜி (56). இவரது நண்பரான திருச்செங்கோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சண்முகவேலு(55) என்பவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை முடிந்ததும் சென்னையில் இருந்து காரில் சண்முகவேலு, அவரது மகன் கிரிவரதன் மற்றும் ராம்ஜி உட்பட நான்கு பேர் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது காரை சண்முகவேல் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆடிட்டர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்த மூன்று பேரும் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.