இந்திய காதலனை திருமணம் செய்ய 2 நாடுகளை கடந்து வந்த பாக்., பெண்| Pakistani woman crossed 2 countries to marry Indian boyfriend

கராச்சி: சட்டவிரோதமாக இரண்டு நாடுகளை கடந்து வந்து, இந்தியாவில் வசிக்கும் காதலனை திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹைதராபாத் நகரில் வசிப்பவர் சோஹைல் ஜீவானி. இவரது மகள் இக்ரா ஜீவானி, 16. கல்லுாரி மாணவியான இவர் ‘ஆன்லைன்’ வாயிலாக ‘லுாடோ’ என்ற விளையாட்டை ஆர்வமுடன் விளையாடி வந்தார்.

இந்த விளையாட்டு வாயிலாக நம் நாட்டின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங், 26, என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

முலாயம் சிங் தன் பெயரை சமீம் அன்சாரி என்றும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், முலாயம் சிங் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.

லுாடோ விளையாட்டு வாயிலாக, முலாயம் – இக்ரா இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து, இக்ரா தன் நகைகளை விற்றும், நண்பர்களிடன் கடன் வாங்கியும் பணம் சேர்த்து, பாகிஸ்தானில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் துபாய் சென்றுள்ளார். பின், அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வந்துள்ளார்.

பின் அங்கிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து, கர்நாடக தலைநகர் பெங்களூருக்கும் வந்து விட்டார். இக்ரா ஜீவானியின் பெயரை ரேவா என மாற்றிய முலாயம் சிங், அவருக்கு ஆதார் அட்டை வாங்கி, இருவரும் திருமணம் செய்து வாடகை வீட்டில் வசித்தனர்.

ரேவா என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்தார்.

இதற்கிடையே, தன் மகளைக் காணவில்லை என சோஹைல் ஜீவானி, ஹைதராபாத் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம், ஹிந்துப் பெண்ணாக மாறிய இக்ரா தினமும் நமாஸ் செய்வதைப் பார்த்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கர்நாடக போலீசார் வந்து முலாயம் சிங் மற்றும் இக்ரா இருவரிடமும் துருவித் துருவி விசாரித்தனர்.

latest tamil news

விசாரணையில், ரேவா பாகிஸ்தான் பெண் என்பதும், சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து, திருமணம் செய்து வசித்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இக்ரா வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நம் வெளியுறவுத் துறை வாயிலாக பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். முலாயம் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.