சென்னை: தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த நவ. 8-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் 55,071 பட்டதாரிகள் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (பிப்.25) நடைபெற உள்ளது. இதற்காக சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.