சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி, பிப்.25-ம்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கும். அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் விவகாரத்தை திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். வானொலி, வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவை வாயிலாக மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல கூடாது. இதை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
25-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கில் இதுவரை 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள்மதுவிலக்கு தடுப்பு தொடர்பானவை என்று செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.