ஈரோடு கிழக்கு: யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஈரோடு கிழக்கு தொகுதி களைகட்டத் தொடங்கியது. கட்சியினரை தவிர்த்து பொது மக்களும் பலர் வேலைகளுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நாளை மறுதினம் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மக்கள் மனநிலை எப்படி உள்ளது, யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து தொகுதிக்குள் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை, நோட்டாவை சேர்த்து 78 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின்படி, மக்கள் ஆய்வு அமைப்பு 45 களத் தகவல் சேகரிப்பாளர்களுடன் பிப்ரவரி 21 முதல் 23 வரை 1590 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துகணிப்பு முடிவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு 39.5 சதவிகிதம் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு 24.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவிற்கு 9.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்கு இந்த கட்சிக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு 2 சதவிகிதம், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 1.5 சதவிகிதம், நோட்டாவிற்கு 2 சதவிகிதம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை சொல்ல விரும்பாதவர்கள், இன்னும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என்று கூறியவர்கள் 21 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 21 சதவீத வாக்குகள் கடைசி நேர பரபரப்பை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

அந்த வாக்கு வெற்றி வாய்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை மார்ச் 2ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.