ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, திமுக சார்பில் நேற்று டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.25) காலை முதல் வீடுதோறும் ஒரு கிராம் எடையுள்ள தங்கக்காசு விநியோகம் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில், திமுக மற்றும் அதிமுகவினர் பணம் மற்றும் பல்வேறு பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடுகள் தோறும், வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 3000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பேக், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 2000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, அகல்விளக்கு, வெள்ளி டம்ளர், பேண்ட், சட்டை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுக சார்பில் இரண்டு வாக்கிற்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. இதற்கான சிறப்பு பரிசு வாக்குப்பதிவு நாளன்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல், டோக்கனை பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக ஒரு கிராம் எடையுள்ள தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் தங்ககாசு விநியோகத்தால், வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்க்காளர்கள் ஒருவருக்கொருவர், உங்கள் பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டதா, தங்கக்காசு வழங்கப்பட்டதா என ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.