கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ஓராண்டாகியும் போர் முடியவில்லை. இரு நாடுகளிலும் பல லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அப்பாவி மக்கள் பலரும் போருக்கு இரையாகியுள்ளனர். மேலும் பல லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி போரை நிறுத்துவது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ், ஐ.நா விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் பிற நாடுகளின் அமைதி சீர்குலைந்து இருப்பதாகவும் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து இருப்பதாகக் கூறினார். “போர் என்பது மிகப்பெரிய பிரச்னை. எந்த ஒரு பிரச்னைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்,” என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மொத்தம் 193 நாடுகள் உள்ளடக்கிய சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், புறக்கணித்து 37 நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஈரான், ஈராக், மங்கோலியா, வியட்நாம், கசகஸ்தான் என போரை புறக்கணித்தவர்களில் பெரும்பாலானவை ஆசிய நாடுகள். உக்ரைன் – ரஷ்ய போரை தடுக்கும் தீர்மானத்தைப் புறக்கணிப்பதின் சர்வதேச அரசியல் கணக்கு என்ன? என்னும் கேள்வி எழுகிறது.

இதுபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதும் 141 நாடுகள் போரை நிறுத்த தங்களின் ஆதாரவைப் பதிவு செய்திருந்தனர். இதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தனர்.
போர் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என சொல்லும் இந்தியா அமைதியைக் கொண்டுவர தீர்மானத்தை ஆதரிக்காமல் இருப்பது ஏன் என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து தங்களுடைய மௌனத்தின் மூலம் தன் ஆதரவை மறைமுகமாக ரஷ்யாவுக்கு வழங்குவதாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா பொது சபையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியபோதும், “உக்ரைன் ரஷ்ய போரில் இந்தியா அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே நம்புகிறது. அதற்கு மட்டுமே துணை நிற்கிறது” என்றார். எனினும் இதற்கு முன்பு ஐ.நா பொது சபை பாதுகாப்பு கவுன்சில் மனித உரிமை கவுன்சில் என பல அமைப்புகளும் ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வந்தது. அதில் இந்தியா பல்வேறு காரணங்களை முன்வைத்து தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்தது. அதை இந்த முறையும் பின்பற்றி இருக்கிறது.

இந்தியாவின் புறக்கணிப்பு யாருக்கு லாபம்?
பல ஆண்டுகளாகவே ரஷ்யா இந்தியாவுக்கு இடையே நெருக்கமான உறவு நிலவி வருகிறது. குறிப்பாக 1955-ம் நாட்டில் காஷ்மீர் மீதான இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக சோவியத் தலைவர், “நாங்கள் மிக அருகில் இருக்கிறோம். மலை உச்சியில் இருந்து எங்களை அழைத்தால் நாங்கள் உங்கள் பக்கத்தில் இருப்போம்” என்று கூறியது இந்தியா ரஷ்யாவிற்கு இடையேயான உறவு எவ்வாறு இருந்தது என்பதை உணர்த்தும்.
2019 -ம் ஆண்டில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு தளர்த்திபோது பிற நாடுகள் விமர்சங்களை முன்வைத்தது, ரஷ்யா, `இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என கூறி விமர்சனத்தைத் தவிர்த்தது. இந்தியா ரஷ்யா உறவு தற்போது உண்டானதல்ல பல ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது.

ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் ரஷ்ய நாட்டையே இந்தியா பெருமளவில் நம்பி இருக்கிறது. எனவே, உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு இந்தியா ரஷ்யாவை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மட்டுமே கூறி வந்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி படையெடுப்புக்கு பிறகு உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய், எரிவாயு சார்ந்த தொழில்களில் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பல பங்களிப்புகளை ரஷ்யா செய்துள்ளது. மேலும் அவர்களின் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அதேபோல் படைகளுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கி வருகிறது . இதில் விமானம், டாங்கிகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகள் அடங்கும்.

2030 -ம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது. இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை மிகவும் அவசியம் என்பதால் ரஷ்யாவின் தேவை இந்தியாவிற்கு அதிகரித்துள்ளது.
இதன் விளைவாகவே, கடந்த ஆண்டை விட ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம் 33 % உயர்ந்துள்ளது. இதை அமெரிக்கா விமர்சித்த போதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்தது. இந்திய மக்களின் தேவையால் இறக்குமதி அவசியமாகிறது என்று இந்தியா வெளியுறவு துறை அமைச்சகம் சொன்ன பதிலை, அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதனால் அது பற்றி பின்நாட்களில் அமெரிக்கா பேசவில்லை.

சீனா நிலைபாடு என்ன?
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்கு பிறகு மூன்றாவது முறையாக நடக்கும் வாக்களிப்பில் இருந்து விலகி, சர்ச்சை எழும்பாமல் இருக்க நடுநிலை வகிக்க முயற்சிக்கிறது சீனா. இதை உறுதி செய்யும் வகையில் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், `உலக நாடுகளின் இறையாண்மை மதிக்கிறோம். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்தம் அவசியம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே சாத்தியமான வழி’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரை நிறுத்த மறுக்கும் ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் நிலையில் சீனாவுக்கு ரஷ்யாவில் இருந்து வர்த்தக நடவடிக்கைகள் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் சீனாவின் இறக்குமதி 13 சதவீதமும், ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 43 சதவீதமும் உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆய்வுகள், ”சீன நிறுவனங்கள் ட்ரோன்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான மின்னணு பாகங்கள் மற்றும் ரஷ்ய கூலிப்படைகளுக்கு ஆதரவாக செயற்கைக்கோள் படங்களை வழங்கியது” என தெரிவித்தது. அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கும் சீன நிறுவனம் மீதும் பொருளாதார தடைவிதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்குகிறது. பொருளாதாரத் தடைகள் காரணமாக மேற்கு நாடுகளால் ரஷ்யா எண்ணெய் பெற முடியாது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெயை இந்தியா சுத்திகரித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்கிறது. எனவே மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெயைப் பெறுகின்றன. ஆனால், அவர்கள் மீது எந்தப் பழியும் இருப்பதில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியலை உற்றுநோக்குபவர்கள்.