10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்தார். தாய் உயிர் துறந்த சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் பலியானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஒரு குழந்தைக்காக தவமாய் தவமிருக்கும் தாய்மர்கள் பலர் இருக்க, கையில் கிடைத்த 2 குழந்தைகளில் ஒன்று கூட தங்காமல் போனதோடு, அந்த தாயும் பலியான சோகம் விருதுநகரில் அரங்கேறி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மனைவி முத்துமாரி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்த ஒரு வாரத்தில் பலியானதால் மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கர்ப்பமான முத்துமாரி , பிரசவத்திற்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பேர் சொல்ல ஒரு குழந்தை வேண்டுமே என்று காத்திருந்த அவரது வேண்டுதலுக்கு ஏற்ப வெள்ளிக்கிழமை காலை முத்துமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் முத்துமாரி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பிறந்த குழந்தையும் பலியானதாக தெரிவித்ததால் உறவினர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்
உயிரிழந்த முத்துமாரியின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் கிடத்தி தூக்கிச்சென்ற போது , தனது சகோதரியின் உடலை பிணகூறாய்வு செய்யக்கூடாது என்று சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
உறவினர்களிடம் சடலத்தை காண்பிக்காமல் சவக்கிடங்கிற்கு முத்துமாரியின் சடலம் கொண்டு செல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தங்கள் வீட்டு பெண் கொல்லப்பட்டதாக கூறி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்
தனி ஆளாக நின்ற மூதாட்டி ஒருவர், அது எப்படி உடலை கொண்டு போனது யாருக்கும் தெரியாது என்று சொல்வார்கள் என்று வார்த்தைகாளால் வறுத்து எடுத்தார்
ஒரு கட்டத்தில் பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதை அடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்
சம்பந்தப்பட்ட மருத்துவ பணியாளர்களிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. 20 ரூபாய் ஊசி கூட அரசு மருத்துவமனையில் இல்லை என்றும் வெளியில் வாங்கி வரச்சொன்னதாக அங்கிருந்தவர்கள் ஆதங்கப்பட்டனர்
மூச்சு திணறல் ஏற்பட்டதால், தாயும் குழந்தையும் உயிரிழந்ததாக அரசு மருத்துவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை உறவினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எங்களுக்கும் ஒரு குழந்தை என்ற கனவோடு காத்திருந்த பெண், தாயான சில மணி நேரத்தில் தனது குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.