ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பாபு என்பவர் தமிழக பாஜகவில் மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் இணையதளம் வழியாக சைபர் குற்றவிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாபு மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தி இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் உடனே அதை நீக்கி விட்டேன்.
என்னை கைது செய்ய போலீசார் முயற்சிக்கின்றனர். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்த பொழுது குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.