கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பதா? -ஒரு ஆணின் ஆதங்கம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நமது வீடுகளில் ஒரு பழக்கம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து இருந்துவருகிறது.

அது உணவு பரிமாறுதல்.

அதில் என்ன இப்போ ?

இருக்கிறது. பெரும் பிரச்சினை பசுந்தோல் போர்த்திய புலி போல ஒளிந்துகொண்டிருக்கிறது.

ஓட்டலில் சாப்பிட செல்லும்போது சர்வர் என்று நாம் ஜபர்தஸ்தாக விழிக்கும் அந்த பணியாள் கூட டேபிளில் உணவு கொணர்ந்து வைப்பாரே தவிர நமக்கு பரிமாறுவதில்லை. ‘மீல்ஸ்’ என்று தூக்கி கொண்டு வரக்கூடாது. சாதம் தவிர மற்றவை எல்லாவற்றிற்கும் கிண்ணி போட்டுவிட்டார்கள்.

சர்வர் என்று அழைக்கப்படும் சர்வரே நமக்கு பரிமாறுவது கிடையாது என்றால் வீட்டில் எஜமானி என்றழைக்கப்படுபவர் மட்டும் எதற்காக பரிமாற வேண்டும்???.

Representational Image

பெருங்குறு நகரங்கள் கூட ஓரளவுக்கு தேறிவிட்டது. எப்படி தேறியது? கொஞ்சம் படிப்பு. கொஞ்சம் சம்பாத்தியம் செய்கின்ற பெண்களால். சிட்டியை விட்டு விலகி கிராமத்து பக்கம் சென்றால் இந்த பழக்கம் பெவி குயிக் போட்டு ஒட்டி இருப்பதை பார்க்கலாம்.

கணவன் நோயாளியா இல்லை மாற்றுத்திறனாளியா என்ன? தட்டில் எடுத்துவந்து சாதத்தை அருகில் வைக்க, வைத்ததோடு மட்டும் அல்லாமல் பார்த்து பார்த்து அருகில் உட்கார்ந்து குழம்பு, ரசம் என்று ஊற்றுவதெல்லாம் என்ன கணக்கு என்று தெரியவில்லை. இது அன்புங்க என்று மீண்டும் எமோஷ்னல் காரணங்கள் வேண்டாமே.

அப்படியொன்று இருக்கிறது என்றால் பாத்திரம் விலக்குவதோ, துணி துவைப்பதோ, குழந்தையை பார்த்துக்கொள்ளுவதோ, வீட்டை பெருக்குவதோ என்று ஏதாவது ஒரு வேலையில் இந்த அன்பை சொல்லி ஆண்களும் காமிக்கலாமே. செய்யமாட்டார்கள். ரவுண்ட் கட்டியவுடன் கலாச்சாரம் என்று முனங்கக்கூடாது. காரணம் ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தெய்வத்தின் மேல் பழி போடவேண்டியது.

ஏன்? அவர்கள் வாயாலேயே சொன்னதை சொல்கிறேன்.

உடன் வேலை பார்ப்பவர். ஆந்திராக்காரர். அவர்களுடையது ஊரக வீடு. மரங்கள் அடர்ந்த செடி கொடிகள் நிறைந்த பசுமையான சூழலில் அமையப்பெற்ற வீடு. தேக்கு மரம் மற்றும் வாதாங்கொட்டை மரங்கள் அதிகம் உண்டு. இலை எப்பொழுதும் விழுந்த வண்ணமே இருக்கும். ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது செடி கொடி மரங்கள் தோட்ட பராமரிப்பு என்று பேச்சு சென்றுகொண்டிருந்தது.  செலவை குறைக்குபொருட்டு சில பரமாரிப்புகளை நிறுவனம் பார்த்துக்கொள்ளாது என்றும் வீட்டில் குடியிருப்போர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை வந்திருந்த நேரம்.

“சரி, செடிகள் நட்டு வைக்கிறாயே. இலை குப்பைகளையும் நீயே கூட்டிவிடுவாயா?” என்று கேட்டேன்.

“இல்லை” என்று கண்ணடித்தான்.

“ஏன்?” என்று கேட்டேன்

Representational Image

“ஒரு முறை செய்துவிட்டால், அந்த வேலை தன் தலையில் விழுந்து விடும்” என்று ஒரு அரும்பெரும் லாஜிக் ஒன்றை உதிர்த்தான்.

தூக்கிவாரிப்போட்டது. அடேய். பெண் குழந்தை என்பது வீட்டின் மஹாலக்ஷ்மி. இருபது இருபத்தைந்து வீட்டில் ராணி போல வளர்த்து, ஆயிரத்து இருநூறு கிலோமீட்டருக்கு அப்பால் உனக்கு மணமுடித்து உன்னை நம்பி தன் பெண்பிள்ளையை கொடுத்திருக்கிறாரே உன் மாமனார், அந்த நன்றிக்காகவாவது எதாவது செய்யலாமே” என்றேன்.

“ம்ஹூம்” என்றான்

“உனக்குத்தான் அந்த பழமொழி பிரமாதமாக ஒத்துப்போகிறது”

“என்ன?” என்றான்

“கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பது போல” என்றேன்

அதன்பிறகு அவன் என்னிடம் பேசுவதில்லை.

இது ஒன்று மட்டும்தான் குரங்கு என்று பார்த்தால் நம்மூரிலும் பாதிக்கு மேல் குரங்காகத்தான் இருக்கிறது.

இன்னொருவர். கேரளத்துக்காரர்.

வீட்டில் அவருடைய அன்றாட நியமங்களை கேட்டால் தலைசுற்றியது. எழுந்தவுடன் ஒரு பெட் காஃபி. சின்னவீடு பாக்யராஜ் போல குளிக்க துண்டு. இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை. டைனிங் டேபிளில் சாப்பாடு. உண்டு விழுங்கியவுடன் இன்சி தட்டிப்போட்ட டீ. இரவு. அது சுக்கு போட்ட பால். மனைவி படித்திருப்பதோ பி.டெக் இன்போர்மஷன் டெக்நாலஜி. ஆனால் செய்வதோ நீர் யானை பராமரிப்பு.

உனக்கு என ஒய் எரிகிறது? என்றால் எரியத்தான் செய்கிறது.

இஞ்சி டீயும், சுக்கு பாலும் போட்டு கொடுப்பதற்கு I.T படித்த மணப்பெண். அதுவும். எப்படி? வரதட்சிணையுடன் டெலிவரி. இதில் நீர் யானைக்கு மிடுக்கு வேறு.

விளங்கிவிடும்.

Representational Image

வாழ்நாள் மூச்சுடும் போடும் சாப்பாட்டை ஒரு முறையேனும் வாய்விட்டு பாராட்டாத அதே ஜென்மங்கள் தான் முழங்கை வரை வழிந்தோடும் சாம்பாரையும் தயிரையும் வழித்து சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம் சகித்து அருகில் இருந்து பார்த்து பார்த்து பரிமாறி கொண்டிருக்கும் பெண்கள் தாய்மார்களின் நிலையை நினைத்தால், நெஞ்சு பொருக்குதில்லையே!

நீர் யானைகள் எப்போதுமே விழித்துக்கொள்ளாது. பெண்கள் தான் எழ வேண்டும். தொழத்தேவையில்லை.

இல்லை. எனக்கு இதுமாதிரி பரிமாறிக்கிட்டு சேவை பண்ணிட்டு இருக்கத்தான் பிடிச்சிருக்கு. அதுதான் அன்பின் வெளிப்பாடுன்னு சொன்னா, இந்த ஆணாதிக்க சமுதாயத்துல ஊறி போனவங்கன்னு தான் அர்த்தம்.

அன்பு என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் வதை தொடங்க ஆரம்பிக்கிறது. அது சுயமரியாதையை கீழே தள்ளி மிதிக்கிறது. உலகில் எந்த ஒரு விளங்கும் சுயமரியாதை இன்றி வாழ்வது இல்லை. மனிதனைத்தவிர.

என்னிடம் அப்ரெண்டிஸ் ட்ரைனிங்கிற்காக சேர்ந்த பெண் அவள். கல்லூரி படிக்கும்பொழுதே சென்னையில் ஒரு IT கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. கோர் கம்பெனியில் வேலை என்று அதற்கு செல்லவில்லை என்றாள். வீட்டில் உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று வீட்டில் நிர்பந்திக்கிறார்கள் என்றாள்.

Representational Image

“பன்னாட்டு நிறுவனம். கிடைக்க போகும் exposure நன்றாக இருக்கும். இங்கேயே இருந்தால் அப்ரெண்டிஸ் முடித்துவிட்டு இதே ஊரில் வேறு வேலை கிடைக்காது. யாராவது ஒருவன் மணம் முடித்து உன்னை அழைத்து செல்வான். ஐந்து ரூபாய்க்கு ஒரு தோடு வேண்டும் என்றால் கூட அவனிடம் நிக்க வேண்டும். ஐந்து ரூபாய் என்பது தோடுக்கு அதிகம் என்று சொல்லுகிற லூசுகள் அதிகம். நேப்கினுக்கு கூட பைசா பார்க்கும் ஜந்துக்கள் உண்டு. ஆதலால் சொந்த காலில் நில். கிளம்பி விடு” என்று துரத்திவிட்டேன்.

வேலை பார்த்து என்ன கிழித்தாய்? என்றால் இதைச்சொல்வேன். வாழ்க்கையில் ஒரு பெண்ணின் சுயமரியாதையை காப்பாற்றியதில் ஆகபெரும் நிம்மதி எனக்கு. இன்றும் தொடர்பில் இருக்கிறாள். வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் இன்னும் நாலு பேரை தேற்றி விடக்கூடும்.

‘சும்மா அடிச்சிவிடாதீங்க. அஞ்சு ரூபாய்க்கு கணக்கு பாப்பாங்களா?’ அப்டினு மூன்றாவது முறையாக தூக்கிக்கொண்டு வந்தீர்களேயானால் இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.

இன்னோருவர். வயசு முப்பத்தியெட்டு. கல்யாணமாகி ரெண்டு குழந்தை. சம்பாதிக்கிறத முழுசா அவங்க அப்பா அம்மா கையில் கொடுத்துவிடுவார். சாயங்காலம் வெளில போக வேண்டும் என்றாலும் அப்பாகிட்ட முப்பது ரூபா கேட்டுட்டு பஜ்ஜி சாப்பிடப்போவார். அவங்க அப்பா அதிலேயும் பத்த கட் பண்ணிக்கிட்டு இருபது தான் கொடுப்பார். வாங்கிட்டு போய்டுவாப்புல. இப்போ அவன் வைப் இந்த பார்ட்டிகிட்ட என்னனு போய் தன்னோட தேவைக்கு நிப்பா? ஒவ்வொன்னையும் மாமனார்ட்ட கேக்கனும்னா இவரு ரோல் என்ன?

பொண்ணுங்கள பெத்தவங்க ஆணாதிக்கத்துக்கு எதிரா தைரியம் கொடுத்து வளக்கணும். படிப்போட கருத்துச்சுதந்திரமும் முக்கியம்ங்கிறத புரிய வைக்கணும். சுயமரியாதையோட வாழ சொல்லிக்கொடுக்கனும். எதிர்த்து நின்னாத்தான் உரிமை கிடைக்கும்.

எழுமின் விழுமின். சோறு போடாதுமின்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.