தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவரான இவர், கடந்த ஜனவரி 29-ம் தேதி, காரில் சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலத்துக்குச் சென்றுள்ளார். அதே நாளில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார். கிருஷ்ணன், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரின் இழுவை வேகம் அதிகமாக இருந்ததால், சிறுமி ஹரிணி தடாகத்திலிருந்து ஆற்றினுள் தண்ணீர் விழுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து தடாகத்தின் அருகில் சிறுமியைப் பிடித்து தூக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் 50 அடி ஆழமுடைய பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார் சிறுமி. இதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது கார் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயகுமார், துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி சிறுமி ஹரிணியைப் பத்திரமாக மீட்டார். தண்ணீரின் இழுவையால் 50 அடி ஆழத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தாலும் லேசான காயத்துடன் சிறுமி உயிர் தப்பினார். சிறுமியைக் காப்பாற்றிய கார் டிரைவர் விஜயகுமாருக்கு சிறுமியின் பெற்றோர் மட்டுமில்லாமல் கூடி நின்ற அனைவரும் நன்றி கூறினர்.

விஜயகுமார் சிறுமியைக் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து விஜயகுமாரை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்துப் பாரட்டியதுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்கண்டேயன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்துப் பாராட்டினர்.

இதனையடுத்து விஜயகுமாருக்கு சிப்காட் நில அளவை பிரிவில் தற்காலிக ஓட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது ஆட்சியரின் கார் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விஜயகுமாரிடம் பேசினோம், “கலெக்டர் சார் என்னை நேரில் அழைச்சு பாராட்டினப்போ குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சாங்க. ‘எந்த உதவினாலும் எங்கிட்ட தாராளமா கேட்கலாம் தம்பி’ன்னு சொன்னாங்க.

உடனே, ‘சார்… எனக்கு ஏதாவது டிபார்ட்மெண்டல டிரைவர் வேலை காலியா இருந்துச்சுன்னா அதை எனக்கு கொடுத்தீங்கன்னா எனக்கும் என் குடும்பத்துக்கும் உதவியா இருக்கும்’ன்னு சொன்னேன். அடுத்த ரெண்டு நாள்ல சிப்காட் சர்வே பிரிவுல தற்காலிக கார் டிரைவரா அப்பாயின்ட்மென்ட் போட்டாங்க. இப்போ கலெக்டர் சாரோட கார் டிரைவரா அப்பாயின்ட்மென்ட் போட்டுருக்காங்க. தற்காலிகப் பணி என்றாலும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கலெக்டர் சாருக்கு நன்றி” என்றார்.