கோடநாடு வழக்கை கூறி எங்களை மிரட்ட முடியாது: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பழனிசாமி ஆவேசம்

ஈரோடு/கோவை: அதிமுக ஆட்சியில் கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கோடநாடுவழக்கை கூறி திமுக எங்களை மிரட்ட முடியாது, என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து, கணபதி நகர், பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

22 மாத திமுக ஆட்சியில் எதுவும்செய்யாததால், உதயநிதி செங்கல்லை தூக்கிக் காட்டி பிரச்சாரம் செய்கிறார். ‘நாட்டின் சூப்பர் முதல்வர்’ என ஸ்டாலின், தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்.

தேர்தலின்போது திமுக அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வு ரகசியத்தை உதயநிதி சொல்லாததால், 15 உயிர்களை இழந்துள்ளோம்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறஅதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பொய் கூறுகிறார். நீட் தேர்வுக்கு ஆதரவாக சிதம்பரத்தின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுகிறார்.

அதிமுகவினர் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டினால், அதற்கு அஞ்சமாட்டோம். கோடநாடு குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சி. கொடுங்குற்றம் புரிந்த அவர்களை ஜாமீனில்எடுத்தது திமுக. எனவே, கோடநாடுவழக்கு என்று கூறி எங்களை மிரட்டமுடியாது. 90 சதவீத வழக்கு விசாரணை முடிந்த நிலையில், எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிந்தித்து வாக்களியுங்கள்: திமுகவினருக்கு வாக்காளர்களின் மீது நம்பிக்கை இல்லாததால், அவர்களைப் பட்டிகளில் அடைத்து வைக்கின்றனர். இது ஜனநாயகப் படுகொலை. அதோடு, நீங்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தீர்கள் என எங்களுக்கு தெரிந்து விடும் என வாக்காளர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர்.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. என்வே, வாக்காளர்களுக்கு எந்தவித அச்சமும் வேண்டாம். தைரியமாக மனசாட்சிப்படி, சுயமாக சிந்தித்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நன்மை நடக்க வேண்டும் என்று கருதி வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கோவை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விதிமீறல் குறித்து புகார்அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் எழுச்சியோடு ஈரோடு இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அதிமுகவேட்பாளர் வெற்றி பெறுவார்.மக்கள் தான் வெற்றியைத் நிர்ணயிப்பார்கள். பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.