சேலம் மாவட்டத்தில் நண்பர்களுடன் குளித்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி இன்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜீவா (21) மேச்சேரியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படைத்து வந்தார். இந்நிலையில் ஜீவா நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து சொக்கனூர் பேரேஜ் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஜீவா எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஜீவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை தேடியும் ஜீவா கிடைக்காததால் நேற்று காலையும் தேடுதல் பணி தொடர்ந்து, மீனவர்கள் உதவியுடன் ஜீவாவின் உடலை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து மேட்டூர் போலீசார் ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.