ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை…!

பெர்லின்,

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறையில் கூட்டான ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.

அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இன்று இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, அவர் இன்று காலை டெல்லிக்கு வருகை தந்து உள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்து உள்ளனர். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமீபத்தில், ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு ஆலோசகருடன் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலை பற்றி விவாதிக்கப்பட்டன.

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டு உள்ள மனிதநேய நெருக்கடி சார்ந்த சூழலை பற்றியும் இந்தியா மற்றும் ஜெர்மனி சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

2-ம் உலக போருக்கு பின்னர் ஜெர்மனி மத்திய குடியரசு நாட்டுடன் தூதரக அளவிலான நட்புறவை மேற்கொண்ட முதல் நிலை நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பொதுவான ஜனநாயக கொள்கைகளின்படி இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவுடன் இணைந்து அந்நாடு ஆண்டுக்கு 1,300 கோடி யூரோ மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறது. அவற்றில் 90 சதவீதம் அளவுக்கு, இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் நோக்கங்களை கொண்டவை ஆகும்.

ஜெர்மனி அதிபருக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் இருதரப்பிலான தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் உரையாடுகின்றனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கு நாளை செல்ல இருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.