தஞ்சாவூர் மாகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஒருவர், `நகர்ப்பகுதியில் புதிதாக சாலை அமைத்த பின்னர், அதை உடைத்து குடிநீர் குழாய் பொருத்துகின்றனர். சிவக்குமார் நடித்த ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் பெண் ஒருவர் ஜாக்கெட் மேல் உள்ளாடை அணிந்து வருவது போன்ற காட்சி போல் உள்ளது மாநகராட்சி சாலை அமைக்கும் செயல்” என பெண் கவுன்சிலர்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆண்களை விட பெண் கவுன்சிலர்களே அதிக அளவில் உள்ளனர். மேயர் சண். இராம நாதன் தலைமையில் மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அதில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு நிறைவேற்ற கூடிய திட்டங்கள் மற்றும் குறைகள் குறித்தும் பேசினர்.
அப்போது 11 வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பாலசுப்ரமணியன், “என் வார்டில் புதிதாக சாலை அமைத்த பின்னர் அதனை உடைத்து குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளை செய்கின்றனர். இதனால் சாலைகள் சேதமடைகின்றன. ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் பெண் ஒருவர் ஜாக்கெட் அணிந்து அதன் மேல் உள்ளாடையை அணிந்து வருவார். அதைப்போல் சாலை அமைக்கும் பணியை செய்கிறார்கள்” என அந்த காட்சியை மேற்கோள் காட்டி பேசினார்.
இதனால் கூட்டத்தில் இருந்த பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே துணை மேயர் அஞ்சுகம் பூபதி, “கூட்டத்தில் இப்படியெல்லாம் பெண்கள் முகம் சுளிக்கின்ற வகையில் பேசக்கூடாது” என கண்டித்தார். மேயர் சண்.இராமநாதன், “சில இடங்களில் அது போன்று நடந்திருக்கலாம். இனி அது போல் நடக்காது” என கூறி பாலசுப்ரமணியனை உட்கார வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர்களும் எப்படி இது போல் பேசலாம் என எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பாலசுப்ரமணியத்திற்கு ஆதரவாக இருக்க கூடிய கவுன்சிலர்கள், `ஒரு கருத்தை சொல்லும் போது கூட்டத்தில் இருப்பவர்களை சிரிக்க வைக்கும் வகையில் சொல்வது அவரின் வழக்கம். அதே போல் எதார்த்தமாக நினைத்து உதாரணத்துடன் அவர் பேசியது சர்ச்சையாகி விட்டது’ என்றனர். இது குறித்து கவுன்சிலர் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம், `மாநகராட்சியில் டெண்டர் விட்டு அவசர அவசரமாக சாலை போடுகின்றனர். பின்னர் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்கு புதிதாக அமைத்த சாலையை உடைக்கின்றனர். இதனால் சாலை குண்டும் குழியுமாகி மோசமாகி விடுகின்றன.

இதனை நடிகர் சிவக்குமார் நடித்த ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் வரும் காட்சியை உதாரணமாக கூறினேன். பணிகள் நடைபெறும் விதத்தை உணர்த்தவே அதனை சொன்னேன். பெண் கவுன்சிலர்கள் முகம் சுளிக்க வைக்கின்ற வகையில் நான் பேசவில்லை” என்றார்.