லாகூர்,
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கீரவானி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் மிகவும் பிரபலமாகும். ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருது கோல்டன் குளோப் ஆகும். இதனிடையே, சமீபத்தில் கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதனை தொடர்ந்து ‘நாட்டு நாட்டு’ ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருதிற்கு பிறகு ‘நாட்டு நாட்டு’ பாடல் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டினரும் இந்த பாடலை ரசிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தான் நடிகை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹைனா அமீர். இவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார்.
இவர் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கு ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின்
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அவர் உற்சாகமாக நடனமாடியுள்ளார். பாகிஸ்தான் நடிகை ஹைனா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.