ஹைதராபாத்: பஸ் நிறுத்தத்தில் வெயிலில் பஸ்ஸுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் சரிந்தார். அவரை அங்கிருந்த போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை செய்து காப்பாற்றினார்.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநிலத்தில் பகலில் உச்சி நேரத்தில் வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில், நேற்று காலை எல்.பி நகர் பகுதியை சேர்ந்த பாலராஜு (32) என்பவர் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஆரம்கர் கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, பாலராஜுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாலையிலேயே சரிந்து விழுந்தார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜசேகர் ஓடிவந்து, பாலராஜுவின் மார்பில் கை வைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை அளித்தார். இதில் அவர் பிழைத்துக்கொண்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது பாலராஜு அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா, காவலர் ராஜசேகரை வெகுவாக பாரட்டினார்.
இதேபோல், தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹரீஷ்ராவும், காவலர் ராஜசேகரின் மனிதாபிமானத்தை வெகுவாக பாராட்டினார். சமூக வலை தளங்களில் ராஜசேகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.