தேனி: தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே கம்பம் சாலையில் போக்குவரத்து விதிமீறும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் முறைப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே தேனி போக்குவரத்து போலீசார் தினமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தணிக்கையின் போது, வாகன பதிவு எண் புத்தகம் உள்ளதா, வாகனத்தில் முறையாக பதிவு எண் எழுதப்பட்டுள்ளதா, வாகனம் ஓட்டி வருபவர் வாகன ஓட்டுனருக்கான உரிமம் வைத்துள்ளாரா, ஓட்டுனர் ஹெல்மெட் அணிந்துள்ளாரா, வாகனத்திற்கு முறையாக இன்சூரன்ஸ் பெறப்பட்டுள்ளதா என தணிக்கை செய்து வருகின்றனர்.
இதில் போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டுனர்களை அதே இடத்தில் நிறுத்தி ஓட்டுனர்களை படம் எடுத்து, அபராதத்திற்கான காரணத்துடன் பில்லையும் கொடுத்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து எஸ்ஐ ரமேஷிடம் கேட்டபோது, ‘‘தினமும் வாகனத்தணிக்கை முறையாக மேற்கொண்டு வருகிறோம். இதில் விதிமீறுவோருக்கு அதே இடத்தில் இ-சலான் இயந்திரம் மூலம் அபராதத் தொகை விதித்து அதற்கான பில்லையும் உடனடியாக கொடுக்கின்றோம், விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நாளொன்றுக்கு சுமார் 80 முதல் 100 பேர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்றார்.