கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது மத்திய அரசால், மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டுவருவோம் எனக் கூறியது. அதன்படியே சட்டமன்றத்திலும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி, ஒப்புதல் பெறவேண்டி மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.

ஆனால் இதுநாள் வரையில் அந்த மசோதா, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் முடங்கியே கிடக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, தமிழக அரசு வாபஸ் பெற்றிருக்கிறது.
நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த இந்த ரிட் மனு, நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எப்படி நீங்கள் ரிட் மனு தாக்கல் செய்தீர்கள், இதற்கு யார் யோசனையளித்தார்கள் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

மேலும், நீட் சட்ட திருத்தத்துக்கு எதிராகப் பிப்ரவரி 18-ம் தேதி புதிய சூட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில், இந்த ரிட் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதன்படி, தமிழக அரசின் கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிபதிகள், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
அதைத்தொடர்ந்து அரசின் இத்தகைய முடிவுக்கு விளக்கமளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தற்போது நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை குறித்த பிரிவுகள் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019-ன் படியே வரையறுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க அரசு மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் ஏற்கெனவே ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட முந்தைய சட்ட விதிகளை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் தவறாக வழக்கு தொடர்ந்திருந்தது.

இவ்வாறு அ.தி.மு.க அரசால் தவறான சட்ட பிரிவுகளின் படி தொடரப்பட்ட இந்த வழக்கினை மேற்கொண்டு தொடர்ந்து நடத்தினால், அது நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்துக்கும், நமது மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் 18. 01.2023 அன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை அடிப்படையில் புதிய வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனவும், அ.தி.மு.க ஏற்கெனவே தவறான சட்ட அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்கினை திரும்ப பெறலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் பாதகமான சட்ட விதிகளை எதிர்த்தும், உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும், உரிய மனுக்கள் இப்போது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்றதை ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்பப்பெற்றுவிட்டது போல, தி.மு.க அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கினை மறைத்து திசை திருப்பும் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. பொருளாதார நிலையிலும், சமூக நீதி அடிப்படையிலும் பின்தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாத்திடவும், நீட் தேர்வை அகற்றிடவும், கொள்கை பிடிப்புடனான சட்டப் போராட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.